செய்திகள்

சத்தீஸ்கரில் விவசாய கடன் தள்ளுபடி - முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவிப்பு

Published On 2018-12-18 10:27 GMT   |   Update On 2018-12-18 10:27 GMT
சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். #ChhattisgarhCM

ராய்ப்பூர்:

பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

ராஜஸ்தான் முதல்- மந்திரியாக அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் ஆகியோர் நேற்று அந்தந்த மாநில தலைநகர்களில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல் மந்திரிகள் பதவி ஏற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி மத்திய பிரதேசத்தில் நேற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் முதன் முதலில் விவசாய கடன்களை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார். அதன் படி கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல்லும் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.1700-ல் இருந்து ரூ.2500ஆக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

“சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னணி தலைவரான நந்தகுமார் படேல் உள்பட 29 காங்கிரஸ் நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டனர். இது போன்ற சம்பவம் வரலாற்றில் நடந்தது இல்லை. இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும்” என்றும் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் உறுதி அளித்தார். #ChhattisgarhCM

Tags:    

Similar News