செய்திகள்

அனைத்து ஏழைகளுக்கும் இலவச கியாஸ் இணைப்பு- மத்திய மந்திரி சபை ஒப்புதல்

Published On 2018-12-18 13:07 IST   |   Update On 2018-12-18 13:07:00 IST
அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. #LPG #UjjwalaLPGSCheme
புதுடெல்லி:

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க “பிரதமர் உஜ்வலா யோஜனா” எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த திட்டத்துக்காக பணக்காரர்கள், சமையல் எரிவாயுக்கு பெறும் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று சுமார் 5 கோடி பேர் மானியத்தை விட்டுக் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மலைவாழ்-பழங்குடி இன மக்களுக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.


இதற்கிடையே இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு செய்தார். அவரது உத்தரவின் பேரில் யார்-யாருக்கு இந்த திட்டத்தை கொண்டு செல்வது என்று ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதுபற்றி டெல்லியில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இறுதியில் அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை-எளியவர்கள் பயன் பெறுவார்கள்.

மத்திய மந்திரிசபை கூட்டத்தில், பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதியின் குறுக்கே ரூ.2926 கோடி செலவில் புதிய பாலம் கட்டவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. #LPG #UjjwalaLPGSCheme
Tags:    

Similar News