செய்திகள்

பா.ஜனதாவுக்கு வாக்காளர்கள் ‘முத்தலாக்’ கொடுத்து விட்டனர் - வலைத்தளங்களில் குவியும் ‘மீம்ஸ்’களால் ருசிகரம்

Published On 2018-12-12 22:20 GMT   |   Update On 2018-12-12 22:20 GMT
சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது தொடர்பாக ருசிகர பதிவுகள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பரபரப்பாக காணப்படுகிறது. #AssemblyElection #BJP #MemesJokes
புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘மீம்ஸ்’கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து உள்ளன.

இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டவர் யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேச முதல்-மந்திரியான இவர், பல்வேறு இடங்களின் பெயரை மாற்றி வருகிறார். இதை தேர்தல் முடிவுகளுடன் தொடர்புபடுத்தி பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அதாவது, ‘தோல்வியை, வெற்றி என பெயர் மாற்றுமாறு மோடியிடம் ஆதித்யநாத் கேட்டுக்கொள்வார்’, ‘காங்கிரஸ் கட்சியின் பெயரை பா.ஜனதா என மாற்றுவார்’ என்று வலைத்தளவாசிகள் கிண்டல் செய்திருந்தனர்.

இந்த மாநிலங்களில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று இருந்தது. அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் இல்லா இந்தியாவின் தொடக்கம் இது’ என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா, இதில் ‘காங்கிரஸ்’ என்ற பெயரை ‘பா.ஜனதா’ என மாற்றி மறுடுவீட் பண்ணி இருந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ‘பப்பு’ என பா.ஜனதாவினர் கிண்டலாக அழைத்து வருகின்றனர். இதை குறிப்பிட்டு பிரபல எழுத்தாளர் சோபா டே, ‘பப்பு தேர்வில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, உடனடி பி.எச்.டி. பட்டம் ஒன்றையும் பெற்றிருக்கிறார். இதே நிலையில் அவர் தொடர்வார் என நம்புவோம். நாடாளுமன்ற தேர்தல் முழுவதும் இந்தியாவுக்கு அவர் தேவை’ என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ‘பா.ஜனதாவினர் இன்று அதிகம் வருத்தப்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் வாக்காளர்கள் அவர்களுக்கு முத்தலாக் கொடுத்து விட்டனர்’ என்று கேலி செய்திருந்தார்.

இது போன்ற ருசிகர பதிவுகளால் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பரபரப்பாக காணப்படுகிறது. #AssemblyElection #BJP #MemesJokes
Tags:    

Similar News