செய்திகள் (Tamil News)

அம்பேத்கர் நினைவு தினம் - பாராளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மலரஞ்சலி

Published On 2018-12-06 05:00 GMT   |   Update On 2018-12-06 05:00 GMT
டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். #AmbedkarDeathAnniversary #NarendraModi #VenkaiahNaidu #Tribute
புதுடெல்லி:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின்னர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மத்திய மந்திரிகள் தாவர்சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். நீதிபதி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரான அவர் சுதந்திரத்திற்கு பிறகு முதல் சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்தார். 1956ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மறைந்தார். மறைவுக்கு பிறகு அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. #AmbedkarDeathAnniversary #NarendraModi #VenkaiahNaidu #Tribute 
Tags:    

Similar News