செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: கேரள சட்டசபை 2-வது நாளாக ஒத்திவைப்பு

Published On 2018-11-30 01:47 GMT   |   Update On 2018-11-30 01:47 GMT
சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகளை கண்டித்து கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் நேற்று 2-வது நாளாக அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது. #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
திருவனந்தபுரம் :

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். போலீசாரின் இத்தகைய கெடுபிடிகளுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கேரள சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் சட்டசபையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரம் 2-வது நாளாக நேற்றும் சட்டசபையில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. காலையில் சட்டசபை கூடியதும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றவாறே, கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு சபரிமலை விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அவர்களில் சிலர் சபாநாயகர் ஸ்ரீராமகிரு‌ஷ்ணனின் மேடைக்கு முன்னே கருப்பு துணியால் உருவாக்கப்பட்ட பேனர் ஒன்றை வைத்தனர். அதில், ‘சபரிமலையில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகள் அனைத்தையும் முற்றிலும் நீக்க வேண்டும்’ என எழுதப்பட்டு இருந்தது.

இதைப்போல சில எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதியில் நின்றவாறே ‘சபரிமலையை பாதுகாப்போம்’ என கோ‌ஷமிட்டனர். சிலர் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பியதால் சபையில் கடும் அமளி நிலவியது.

சபரிமலையில் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், இதனால் பக்தர்கள் ஏராளமான துயர்களை அனுபவித்து வருவதாகவும் கூறிய எதிர்க்கட்சி தலைவர் ரமே‌ஷ் சென்னிதலா, இது தொடர்பாக தாங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதற்கு சபாநாயகர் ஸ்ரீராமகிரு‌ஷ்ணன் மறுப்பு தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பியவாறே இருந்தனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த சபாநாயகர், உறுப்பினர்கள் அனைவரிடமும் அமைதியாக சபையை நடத்த அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அவரது வேண்டுகோளை எதிர்க்கட்சியினர் மதிக்கவில்லை. இதனால் சட்டசபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக ஸ்ரீராமகிரு‌ஷ்ணன் அறிவித்தார். இதனால் சட்டசபையில் 2-வது நாளாக அலுவல்கள் பாதிக்கப்பட்டன. #KeralaAssemblySession #SabarimalaTempleIssue 
Tags:    

Similar News