செய்திகள்

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாயக்கடன் தள்ளுபடி - ராகுல் வாக்குறுதி

Published On 2018-11-26 17:30 IST   |   Update On 2018-11-26 17:30:00 IST
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பத்தே நாட்களில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார். #Rahulpromises #Rajasthanfarmers #farmersloanwaiver
ஜெய்ப்பூர்:

200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் இந்த தேர்தலில் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று இம்மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வந்துள்ளார். முன்னதாக, அஜ்மீரி நகரில் உள்ள காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்காவுக்கு சென்று மலர்போர்வை சமர்ப்பித்த அவர் ஜெய்சால்மர் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உரையாற்றினார்.



அப்போது அவர் கூறியதாவது:-

மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டிலுள்ள 15 தொழிலதிபர்களுக்கு மட்டும் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் வேலையில்லாமல் இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் சுயதொல்ழிகளை தொடங்கவும், அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் வங்கிக் கடன்களை அளிப்போம்.

வாக்களர்களாகிய நீங்கள் எங்களை இங்கே ஆட்சியில் அமர வைக்கப் போகிறீர்கள். ஆட்சி அமைந்த பத்தே நாட்களில் விவசாயிகளின் வங்கிக்கடன்களை எங்கள் அரசு தள்ளுபடி செய்யும். இதற்கு முன்பு இதே வாக்குறுதியை கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அளித்திருந்தது. கொடுத்த வாக்குறுதியின்படி கடன்களை நாங்கள் தள்ளுபடி செய்திருக்கிறோம்.

நான் தவறான வாக்குறுதிகளை தர மாட்டேன். இந்த மேடையில் இருந்து நானோ, சச்சின் பைலட், அசோக் கேலாட் போன்றவர்கள் தரும் வாக்குறுதிகள் எதுவானாலும் அதை நிறைவேற்றியே தீருவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Rahulpromises #Rajasthanfarmers #farmersloanwaiver
Tags:    

Similar News