செய்திகள்

கஜா புயலால் 20 தொகுதி இடைத்தேர்தல் தள்ளிப்போகுமா? தலைமை தேர்தல் ஆணையர் பதில்

Published On 2018-11-26 10:47 GMT   |   Update On 2018-11-26 10:47 GMT
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு அதிகம் உள்ளதால், 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டால் பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் பதில் அளித்துள்ளார். #GajaCyclone #TamilNaduBypolls
புதுடெல்லி:

தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் கஜா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 

தற்போது கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், குறித்த காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. இதற்காக தமிழக அரசு கடிதம் எழுதினால் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்போம். புயல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

தேர்தலை தள்ளி வைக்கும்படி கடிதம் எழுதவில்லை என்றாலும், ஆணையமே தமிழக அரசிடம் கருத்து கேட்கும். தமிழக அரசு தனது கருத்துக்களை தெரிவிக்க 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TamilNaduBypolls
Tags:    

Similar News