செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றி தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு

Published On 2018-11-26 06:01 GMT   |   Update On 2018-11-26 06:01 GMT
வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. #PMO #BlackMoney
புதுடெல்லி:

பிரபல இந்திய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைகளில் பலர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முறைகேடாக பதுக்குவதாக குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் பெரும் அளவில் கருப்பு பணம் வருவதாகவும் கூறப்படுகிறது.

2005-14-ம் ஆண்டுகளில் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் சுமார் ரூ.11 லட்சம் கோடியை கருப்பு பணமாக பதுக்கி வைத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய நிதி விவகார கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ரூ.53 லட்சம் கோடி கருப்பு பணம் ஊடுருவி இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் சஞ்சீவ் சதுர்வேதி என்பவர் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

அதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதில் அளித்த பிரதமர் அலுவலகம் இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறிவிட்டது.

இதனால் சதுர்வேதி மத்திய தகவல் ஆணையத்தை இது தொடர்பாக அணுகினார். அதையடுத்து பிரதமர் அலுவலகம் அடுத்த 15 நாட்களுக்குள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றிய விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று கடந்த மாதம் 16-ந்தேதி உத்தரவிட்டது.


என்றபோதிலும் பிரதமர் அலுவலகம் மத்திய தகவல் ஆணைய உத்தரவின்படி கருப்பு பணம் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் பிரதமர் அலுவலகம் இதற்கு பதில் அளித்து கூறியிருப்பதாவது:-

கருப்பு பணத்தை மீட்பதற்காக ஏற்கனவே சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் கருப்பு பணம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை வெளியே கூறினால் அது விசாரணைக்கு முழுமையாக இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.

அதேபோல் இது சிறப்பு குழுவின் விசாரணையை தாமதப்படுத்துவதற்கும், குற்றவாளிகள் தப்பி விடுவதற்கு உதவி செய்வது போலவும் அமைந்து விடும். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு விதிவிலக்கு அளித்து இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #PMO #BlackMoney 
Tags:    

Similar News