செய்திகள்

வங்கி மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுங்கள் - மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

Published On 2018-11-18 21:49 GMT   |   Update On 2018-11-18 21:49 GMT
வங்கி மோசடியாளர்கள் பற்றி விவரங்களை வெளியிடவேண்டும் என பிரதமர் அலுவலகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #CIC #PMO #RBI
புதுடெல்லி:

பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்களின் பெயர் விவரங்களை வங்கிகள் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் வங்கிகள் அப்படி வெளியிடவில்லை. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்தீப் சிங் என்பவர் மத்திய தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த ஆணையம், வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டுமென்றே திருப்பிச்செலுத்தாத மோசடிப்பேர்வழிகள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கிக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் கூறியது.

ஆனால் அப்படியும் அந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இது குறித்து சந்தீப் சிங், மத்திய தகவல் ஆணையத்தை மீண்டும் நாடினார். அதைத் தொடர்ந்து மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யுலு 66 பக்கங்கள் கொண்ட முழுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் அவர் வங்கி மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கும், மத்திய தகவல் ஆணையத்துக்கும் கண்டிப்புடன் கூறி உள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தார்மீகக் கடமை, அரசியல் சாசன கடமை மற்றும் அரசியல் ரீதியிலான கடமை பிரதமர் அலுவலகத்துக்கு உண்டு.

* பல்வேறு பிரிவிலான தகவல்களையும் வெளிப்படுத்தல் கொள்கை அடிப்படையில் வெளியிட முடியாது என்று ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிரானது. ‘ரிசர்வ் வங்கி- ஜெயந்திலால் என். மிஸ்திரி’ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கும் இது எதிரானது. அனுபவம் வாய்ந்த சட்ட நிபுணர்களையும், தேசிய சட்டக்கல்லூரிகளில் கற்றுத் தேறிய சட்ட பட்டதாரிகளையும் ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தை, தகவல் ஆணையத்தின் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தைரியமாக மீறுகின்றனர்.

* தகவல் அறியும் உரிமை சட்டத்தை ரிசர்வ் வங்கி முழுமையாக அலட்சியம் செய்துள்ளது.

* வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் யார் என அடையாளப்படுத்துவதும், அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தெரிவிப்பதும் பொது நலன் சார்ந்தது. இந்த வழக்கில் பிரதமர் அலுவலகத்தின் நிலைப்பாடு, பொது மக்களுக்கு எந்தப் பலனையும் தராது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News