செய்திகள்

உலகின் மிக உயரமான படேல் சிலையை 75 ஆயிரம் பேர் பார்த்தனர்

Published On 2018-11-11 07:17 GMT   |   Update On 2018-11-11 07:17 GMT
குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். #SardarPatelStatue
சூரத்:

குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் கெவாடியா காலனி என்ற இடத்தில் நர்மதை ஆற்றின் கரையில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இச்சிலை உலகிலேயே மிகப்பெரியது என்ற பெருமை பெற்றுள்ளது.

இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். இதை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.5 கி.மீட்டர் தொலைவில் உள்ள இந்த சிலையில் மீது ஏறிபார்த்தால் அணையின் அழகிய தோற்றம் மற்றும் பள்ளத்தாக்கின் ரம்யமான தோற்றத்தையும் பார்த்து ரசிக்கலாம்.

எனவே, சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை தினங்கள் வந்தன.

அந்த விடுமுறை தினங்களின் போது சுற்றுலா பயணிகளின் வரத்து அதிக அளவில் இருந்தது. 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சிலையை பார்த்து சென்று உள்ளனர்.


சிலையின் 153-வது மீட்டர் உயரத்தில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து பார்த்தால் சர்தார் சரோவர் அணையின் அழகிய தோற்றம் மற்றும் பள்ளத்தாக்கின் இயற்கை காட்சிகளை காணமுடியும். பொதுவாக அங்கு 3 ஆயிரம் பேர் மட்டுமே சென்று பார்க்க அனுமதி வழங்கப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களான 5,6,7-ந்தேதிகளில் அதிகபட்சமாக 6,500-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விடுமுறை தினங்களில் பார்வையாளர்கள் மாடம் திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மூடப்பட்டது. அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தீபாவளி விடுமுறையின் போது குஜராத் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

அவர்கள் சிலையை பார்க்க வசதியாக 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிலையை பார்க்க வந்தவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 25 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும், ரூ.80 லட்சம் வசூலாகி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SardarPatelStatue
Tags:    

Similar News