செய்திகள்

அயோத்தியில் ராமர் சிலை, படேல் சிலையைவிட உயரமாக அமைக்கப்பட வேண்டும் - சமாஜ்வாடி கட்சி

Published On 2018-11-05 12:11 IST   |   Update On 2018-11-05 12:11:00 IST
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. #RamStatue #SamajwadiParty

லக்னோ:

குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிலையாக படேல் சிலை 182 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று சாமியார் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவர் அயோத்திக்கு வர உள்ளார். அங்கு சிறப்பு தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதில் அவர் பங்கேற்கிறார்.

அப்போது சிலை அமைப்பதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிலை 152 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த சிலை படேல் சிலையை விட 30 மீட்டர் உயரம் குறைவாக இருக்கும்.

 


அயோத்தி சரயூ நதி ஓரமாக சிலை அமைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். எந்த இடத்தில் சிலை அமைப்பது என்று இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இதற்கிடைய சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ் வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் கூறியதாவது:-

படேல் சிலை அமைக்க திட்டமிட்டபோதே ராமர் சிலையையயும் அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கலாம். அதை யார் தடுத்தது.

படேல் சிலையை விட ராமருக்கு சிறிய சிலையை அமைக்க திட்டமிடுகிறார்கள். அதாவது பிரதமர் அமைத்த சிலையைவிட உயரமான சிலை அமைக்க கூடாது என்ற எண்ணம் உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு உள்ளது. அவ்வாறு இருக்க கூடாது.

சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட ராமர் சிலை உயரமாக கட்டப்பட வேண்டும். அயோத்தியில் மட்டுமல்ல ராம்பூரிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #RamStatue #SamajwadiParty

Tags:    

Similar News