செய்திகள்

கர்நாடகாவில் பரிசு பொருட்களை தூக்கி எறிந்த மந்திரி - வைரலாக பரவும் காட்சிகள்

Published On 2018-11-01 21:50 GMT   |   Update On 2018-11-01 21:50 GMT
கர்நாடகத்தில் உள்விளையாட்டரங்க திறப்பு விழாவில் பங்கேற்ற வருவாய்த்துறை மந்திரி விளையாட்டு வீரர்களை நோக்கி பரிசுப் பொருட்களை துாக்கி எறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. #RVDeshpande
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தின் கார்வார் மாவட்டத்தில் ஹலியால் தொகுதி அமைந்துள்ளது. இங்கு பொதுப்பணித் துறையால் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதன் திறப்பு விழாவுக்கு பின்னர், தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கி கவுரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவில் ஹலியால் தொகுதி எம்.எல்.ஏ.,வும், மாநில வருவாய்த்துறை மந்திரியுமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே கலந்து கொண்டார்.

அவர் உள்விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். தொடர்ந்து, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஒவ்வொருவராக பரிசுகள் பெற அழைக்கப்பட்டனர். வீரர்கள் மேடைக்கு அருகில் வந்தபோதும், அவர்களுக்கு உரிய விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொருட்களை கைகளில் கொடுக்காமல் மேடையில் இருந்தபடி தூக்கி எறிந்தார்.

வருவாய்த்துறை மந்திரியின் இந்த செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேஷ்பாண்டே ஏற்கனவே குடகு மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை நோக்கி நிவாரண பொருட்களை தூக்கி வீசிய சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #RVDeshpande
Tags:    

Similar News