செய்திகள்

மனோகர் பாரிக்கர் வீட்டில் நடந்த கோவா அமைச்சரவை கூட்டம்

Published On 2018-11-01 10:30 GMT   |   Update On 2018-11-01 10:30 GMT
கோவாவில் 3 மாதங்களுக்குப் பிறகு முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில் அவரது இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. #Goa #ManoharParrikar
பனாஜி:

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்கா சென்று உயர்சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு திரும்பினார்.

இந்த நிலையில் மீண்டும் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் பிறகு மீண்டும் கோவா திரும்பி பனாஜியில் தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

முதல்-மந்திரிக்கு பல மாதங்களாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டு செயல்பட முடியாததால் கோவாவில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டது. முதல்- மந்திரியின் இலாகாக்கள் மந்திரிகளுக்கு பிரித்து அளிக்கப்பட்டது. முதல்-மந்திரி செயல்பட முடியாததால் வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பனாஜியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மாநில அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். இதன் மூலம் 3 மாதங்களுக்குப் பிறகு கோவா மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்று இருக்கிறது.

முன்னதாக நேற்று முன்தினம் தனது வீட்டில் மாநில முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஆலோசனை கூட்டத்தை மனோகர் பாரிக்கர் நடத்தினார்.

இந்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தை வீட்டில் நடத்தியுள்ளார். அப்போது மந்திரிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவழைத்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக இன்று கட்சி நிர்வாகிகளையும் மனாகர்பாரிக்கர் தனது வீட்டுக்கு வரவழைத்து கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதுபற்றி மூத்த மந்திரி விஜய்சர்தேசாய் கூறும் போது, “பாரிக்கர் முழு உடல்நலத்துடன் உள்ளார். அவர் மந்திரிகளுடன் முக்கிய வி‌ஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெறவில்லையே தவிர மற்ற அனைத்துவிதத்திலும் கூட்டம் திருப்திகரமாக இருந்தது. சுரங்க தொழிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை நீட்டிப்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதல்-மந்திரிக்கு ஓய்வு தேவைப்பட்டதால் அவரது வீட்டில் கூட்டம் நடத்தப்பட்டது” என்றார். #Goa #ManoharParrikar
Tags:    

Similar News