செய்திகள்

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா, ஸ்ரீகாந்த் புரோஹித் மீது குற்றச்சாட்டு பதிவு

Published On 2018-10-30 09:12 GMT   |   Update On 2018-10-30 09:12 GMT
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் தாக்குர், ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்டோர் மீது தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. #MalegaonBlast #ColPurohit
மும்பை:
    
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.



இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். ராணுவ லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர்.

2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தனர்.

அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. பின்னர், பிரசாத் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாத்யாயா உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷியாம் சாஹு, ஷிவ்நாராயண் கல்சங்ரா மற்றும் பிரவீன் தகல்கி ஆகிய மூவர் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சாத்வி பிரக்யா, லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் திவேதி, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யா, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். #MalegaonBlast #ColPurohit
 
Tags:    

Similar News