என் மீது நடந்த தாக்குதல் குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் - ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை
ஐதராபாத்:
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வாலிபர் ஒருவரால் தாக்கப்பட்டார். கூர்மையான ஆயுதத்தில் குத்தியதில் அவருடைய தோள்பட்டையில் ரத்த காயம் ஏற்பட்டது.
அவரை தாக்கிய ஸ்ரீனிவாசராவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறும்போது, அரசியல் ஆதாயத்துக்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் நடத்திய நாடகம் தான் இது என்று கூறினார்.
இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
நான் விமான நிலையத்தில் இருந்தபோது அந்த வாலிபர் என்னிடம் வந்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார். நான் அதற்கு சம்மதித்தேன். அப்போது ஆயுதத்தை எடுத்து என் கழுத்தில் குத்த வந்தார்.
நான் உடனே சுதாரித்துக் கொண்டு தோள்பட்டையால் தடுத்தேன். இதனால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதை அங்கிருந்த எல்லோரும் பார்த்தார்கள். நான் எனது பாதுகாப்பு விஷயத்தை மக்களிடமே விட்டு விடுகிறேன்.
ஆனால் நாங்களே ஏற்பாடு செய்து நாடகம் ஆடுவதாக சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார். தாக்குதல் நடந்துமே டி.ஜி.பி. ஆர்.பி. தாகூர் அரசியல் ஆதாயத்துக்காக இந்த சம்பவம் நடந்தது என்று கூறினார். அதைத்தான் சந்திரபாபு நாயுடுவும் கூறுகிறார்.
இதில் உண்மை வெளியே வரவேண்டும் என்றால் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். மாநில அரசின் புலனாய்வு அமைப்பு விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் ஏற்கனவே இப்படித் தான் விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுகிறார்கள்.
இதில் நடந்த உண்மை வெளிவருவதற்கு மத்திய அரசின் விசாரணை அவசியமானதாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ஜெகன்மோகன் ரெட்டி மத்திய உள்துறை மந்திரிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதில் தன் மீது நடந்த தாக்குதல் குறித்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த கடிதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜய சாய் ரெட்டி மூலமாக ராஜ்நாத்சிங்கிடம் வழங்கப்பட்டுள்ளது. #JaganMohanReddy #Visakhapatnamairport