செய்திகள்

கோவா முதல்வர் பாரிக்கருக்கு கணைய புற்று நோய் - அரசு அதிகாரப்பூர்வ தகவல்

Published On 2018-10-28 05:35 GMT   |   Update On 2018-10-28 05:35 GMT
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. #GoaCM #ManoharParrikar

பனாஜி:

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர். முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரியான அவர் கடந்த 7 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்றார்.

கோவா, மும்பை, நியூயார்க், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மனோகர் பாரிக்கர் இல்லாததால் கோவா ஆட்சி அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட்டது.

கடந்த 14-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தது முதல் அவர் பொது வெளியில் முகத்தை காட்டவில்லை. தற்போது வீட்டில் படுக்கையில் தான் இருக்கிறார். டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள் 24 மணி நேரமும் அவரது அறையில் கடமையாற்றி வருகிறார்கள்.

மனோகர் பாரிக்கருக்கு என்ன நோய் என்பதை மாநில அரசும், பா.ஜனதாவும் ரகசியமாக வைத்து இருந்தன. அவரது உடல் நிலை குறித்து விளக்க வேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் மாநிலத்தை வலியுறுத்தியது.

மனோகர் பாரிக்கர் உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பதை 4 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் காங்கிரஸ் கெடு விதித்தது.


இந்த நிலையில் மனோகர் பாரிக்கருக்கு என்ன நோய் என்ற விவரத்தை மாநில பா.ஜனதா அரசு வெளியிட்டுள்ளது. அவர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கோவா மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மனோகர் பாரிக்கர் கோவா முதல்-மந்திரி . அவருக்கு கணைய புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

அவர் தன் குடும்பத்துடன் அமைதியாக வாழட்டும். இதற்காகவே எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.

அவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட விரும்பினால் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அவர் குடும்பம்தான் அதை தெரிவிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி கோர்ட்டுக்கு போய் மனோகர் பாரிக்கரின் நோயை தெரிந்து கொள்ள விரும்பினால் அது அவர்களது விருப்பமாகும்.

இவ்வாறு சுகாதார மந்திரி ரானே தெரிவித்துள்ளர். #GoaCM #ManoharParrikar

Tags:    

Similar News