செய்திகள்

7 நாள் அரசு முறை பயணமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பயணம்

Published On 2018-10-26 23:19 GMT   |   Update On 2018-10-26 23:19 GMT
அக்டோபர் 31-ம் தேதி முதல் 7 நாட்களுக்கு ஆப்ரிக்க நாடுகளான ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பயணம் மேற்கொள்ள உள்ளார். #VenkaiahNaidu #Africa
புதுடெல்லி:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை 7 நாட்கள் அரசு முறை பயணமாக மலாவி, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது பயணத்தின் முதல் நாடாக போட்ஸ்வானாவுக்கு செல்ல உள்ளார் வெங்கையா நாயுடு. சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தியா - போட்ஸ்வானா இடையேயான சந்திப்பில், அந்நாட்டு துணை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மேலும், போட்ஸ்வானாவின் 13-ம் ஆண்டு உலகளாவிய வருடாந்திர கண்காட்சியை துவங்கி வைக்க இருக்கிறார். தொடர்ந்து, அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் கலந்துரையாட உள்ளார்.

இரண்டாவது நாடாக ஜிம்பாப்வே செல்லும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டின் அதிபர், துணை ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி, சபாநாயகர் ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தனது பயணத்தின் இறுதி நாடாக மலாவி செல்ல உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டின் அதிபர் மற்றும் சபாநாயகருடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #VenkaiahNaidu #Africa
Tags:    

Similar News