செய்திகள்

துப்பாக்கியை காட்டி மிரட்டிய பகுஜன் சமாஜ் தலைவர் மகனுக்கு மேலும் 14 நாள் நீதிமன்ற காவல்

Published On 2018-10-22 09:48 GMT   |   Update On 2018-10-22 09:48 GMT
டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கைத்துப்பாக்கியை உருவி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மகனின் நீதிமன்ற காவல் இன்று மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. #AshishPandey #DelhiHyattRegency
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், லக்னோ நகரை சேர்ந்த ராகேஷ் பான்டேவின் மகனான ஆஷிஷ் பான்டே என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் தனது கைத்துப்பாக்கியை உருவி ஒரு பெண் உள்பட சிலரை மிரட்டும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து,  இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேச மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில்  இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் ஆஷிஷ் பான்டே சரணடைந்தார்.


ஆஷிஷ் பான்டேவின் வழக்கறிஞர்கள் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஆஷிஷ் பான்டேவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆஷிஷ் பான்டே முன்னாள் எம்.பி.யின் மகன் என்பதால் இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன. அவரது துப்பாக்கியை வேண்டுமானால் கோர்ட்டில் ஒப்படைத்து விடுகிறோம். அவருக்கு விசாரணை காவல் அவசியமற்றது என அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 22-ம் தேதிவரை ஆஷிஷ் பான்டேவை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இந்நிலையில், இன்று ஆஷிஷ் பான்டே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படார். அவரது காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். #AshishPandey  #DelhiHyattRegency #PatialaHouseCourt #judicialcustody
Tags:    

Similar News