செய்திகள்

தெலுங்கானா மாநிலத்தில் காரில் மூட்டை மூட்டையாக பணம் - ரூ.10 கோடி பிடிபட்டது

Published On 2018-10-20 09:20 GMT   |   Update On 2018-10-20 09:20 GMT
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு இடையே காரில் கொண்டு செல்லப்பட்ட 10 கோடி ரூபாயை சோதனைச் சாவடியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். #TelanganaPolls
ஐதராபாத்:

தெலுங்கானா மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தீர்மானித்தார். இதையொட்டி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தலுக்கான அறிவிப்புடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

டிசம்பர் மாதம் 7-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெலுங்கானா மாநிலத்தில் இரு இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.

அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பைன்ஸா நகரம் மற்றும் காமாரெட்டி மாவட்டத்தில் சார்மினார் அருகே நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இதற்கிடையே, தேர்தலின்போது அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் மற்றும் சிறப்பு பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில எல்லைப்பகுதியான அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பிப்பரவாடா சோதனைச் சாவடியில் நேற்று மாலை போலீசார் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது காரினுள் கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.



கோணி மூட்டைகளுக்குள் இருந்த புதிய 2 ஆயிரம், ஐநூறு ரூபாய் கட்டுகள் என மொத்தம் பத்து கோடி ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், இந்த பணத்தை கொண்டுவந்த இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பணத்தை கொண்டு சென்றவர்கள் நாக்பூரை சேர்ந்த பிரபல வியாபாரிகள் என்பதும், கர்நாடக மாநிலத்துக்கு அவர்கள் சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். #TelanganaPolls
Tags:    

Similar News