செய்திகள்

ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

Published On 2018-10-14 18:43 GMT   |   Update On 2018-10-14 18:43 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் 61 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். #Zikavirus
ஜெய்பூர் :

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்பூர் மாவட்டத்தில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது  மருத்துவமனை பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 61 - ஆக உள்ளதென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 11 கர்ப்பிணி பெண்களும் அடக்கம் என்பது நினைவு கூறத்தக்கது.

டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் உருவாகும் புதிய கிருமி தொற்றான ஜிகா வைரஸ் பாதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உணரப்பட்டது.

இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த வைரஸ் கிருமி பற்றி தெரிய வந்தது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ஜிகா வைரஸ் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. #Zikavirus
Tags:    

Similar News