செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஊழல்வாதி - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கு

Published On 2018-10-11 21:48 GMT   |   Update On 2018-10-11 21:48 GMT
இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி என இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். #RafaleDeal #RahulGandhi
புதுடெல்லி :

இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.

இந்த பேரத்தில் ரபேல் போர் விமானங்களுக்கு விலையை நிர்ணயம் செய்ததிலும், விமானங்களை தயாரித்து வழங்குவதில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக சேர்த்ததிலும் ஊழல் நடந்துள்ளது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதற்கிடையில்,  பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட்  பத்திரிகை டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டசால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக என மீடியாபார்ட் கூறியுள்ளது.

ஏற்கனவே பிரான்ஸ் முன்னாள் அதிபர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகி இருந்த நிலையில் பிரான்ஸ் புலனாய்வு பத்திரிகை செய்தியால் இவ்விவகாரம் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கு மேலும் தீனி போட்டது.

இந்நிலையில் மீடியா பார்ட் பத்திரிக்கை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னதாக  பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி, இந்திய பிரதமரிடம் ரிலையன்ஸ் ஒரு ஒப்பந்தம் செய்ய  வேண்டும் என்று கூறி உள்ளார். அதையே ரஃபேல் மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.  இது இந்த ஊழலில் ஒரு  தெளிவு ஆகும்.

திடீரென்று பாதுகாப்பு அமைச்சர் பிரான்சிற்கு பயணம் மேற்கொண்டது ஏன்? அதற்கு என்ன இப்போது அவசரம்? இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி என இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.

டசால்ட் பெரிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அரசாங்கம் என்ன சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்களோ அதைத்தான் டசால்ட் கூறுகிறது. பிரதமர் இந்த இழப்பீடு இல்லாமல் ஒப்பந்தம் செய்யப்படமாட்டார் என்று அவர்களின் உள் ஆவணம் தெளிவாகக் கூறுகிறது என அவர் தெரிவித்துள்ளார். #RafaleDeal #RahulGandhi
Tags:    

Similar News