செய்திகள்
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

அலிபிரியில் ரூ.120 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி- திருப்பதி தேவஸ்தான தலைவர் தகவல்

Published On 2018-10-10 05:06 GMT   |   Update On 2018-10-10 05:06 GMT
அலிபிரியில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க ரூ.120 கோடி செலவில் முதல் கட்டமாக 500 அறைகளை கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார். #Tirupati
திருமலை:

திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் புட்டா.சுதாகர் யாதவ் தலைமை தாங்கி பேசினார்.

திருமலையில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்து தங்கும் விடுதிகள் ரூ.112 கோடி செலவில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சீரமைக்கப்பட உள்ளது. அதற்காக ஒரு தனிக்குழு அமைக்கப்பட உள்ளது. தேவஸ்தான நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை தீர்க்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.

தேவஸ்தானத்துக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை குறைக்கப்பட உள்ளது. பரகாமணி சேவா குலுவில் நிரந்தர ஊழியர்களே காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காணிக்கை எண்ணுவதற்கு சில நிரந்தர ஊழியர்கள் வருவதில்லை. அவர்கள் வந்தாலும், வரா விட்டாலும் பரவாயில்லை. இதுபற்றி ஊழியர்களிடம் கேட்க வேண்டாம்.

வெளிநாட்டில் உள்ள தேவஸ்தான கோவில்களில் சில ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு 3 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்க்க அனுமதி வழங்கப்படும். பின்னர் 3 ஆண்டுகள் முடிந்ததும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவர். அவர்களுக்குப் பதில் வேறு ஊழியர்கள் வெளிநாடுகளில் பணியமர்த்தப்படுவர். ஒரு முறை வெளிநாட்டில் வேலை பார்த்தவர், பின்னர் மீண்டும் அடுத்த முறை வேலை பார்க்க முடியாது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் வேலை பார்த்த தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். அதற்கான நடைமுறை வருகிற நவம்பர் மாதம் 1-ந்தேதி அமலுக்கு வருகிறது. அலிபிரியில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க ரூ.120 கோடி செலவில் முதல் கட்டமாக 500 அறைகளை கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். #Tirupati
Tags:    

Similar News