செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு

Published On 2018-10-05 13:00 GMT   |   Update On 2018-10-05 13:00 GMT
இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். #VladimirPutin #RamNathKovind #PutininIndia
புதுடெல்லி :

இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்து வருகிறது.

அந்த வரிசையில் 19-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். உயர் மட்டக்குழுவினருடன் இந்தியா வந்துள்ள புதின்,  பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அதேபோல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறித்தும், மோடி மற்றும் புதின் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.36 ஆயிரம் கோடி) மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி கையெழுத்தாகியுள்ளது.  

இதைத்தொடர்ந்து ராஷ்ட்ரபதி பவன் சென்ற புதின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இந்திய- ரஷிய உயரதிகாரிகள் உடனிருந்தனர்.



ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பிறகு இந்திய பயணத்தை நிறைவு செய்த புதின், புதுடெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றார். #VladimirPutin #RamNathKovind #PutininIndia
Tags:    

Similar News