செய்திகள்

41 வயதில் சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண் கலெக்டர் - 24 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்

Published On 2018-10-01 10:37 IST   |   Update On 2018-10-01 10:37:00 IST
பெண் கலெக்டர் ஒருவர் 24 ஆண்டுகளுக்கு முன் தனது 41-வது வயதில் சபரிமலைக்கு சென்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. #Sabarimala
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சென்று வழிபட நீண்ட காலமாக தடை இருந்து வந்தது. இதனால் அந்த வயதில் உள்ள பெண்கள் அங்கு செல்வது இல்லை.

இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி வழங்கி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதிப்பது பற்றி கேரள அரசும், தேவஸ்தான போர்டும் ஆலோசித்து வருகின்றன.

இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் கே.பி.வல்சலா குமாரி என்ற பெண் கலெக்டர் சபரிமலை கோவிலுக்கு சென்றுள்ள தகவல் தற்போது தெரியவந்து உள்ளது.

கடந்த 1994-1995-ம் ஆண்டில் இவர் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். அப்போது கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி, பக்தர்களின் வருகையையொட்டி செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக வல்சலா குமாரி சபரிமலைக்கு 4 முறை சென்று உள்ளார்.

புனித பயணம் செல்லும் பக்தராக அல்லாமல் முழுக்க முழுக்க அலுவலக பணியாக மட்டுமே அவர் அங்கு சென்று இருந்தார். அவர் சபரிமலைக்கு சென்றபோது அய்யப்பன் கோவிலில் உள்ள பதினெட்டாம் படியில் ஏறக்கூடாது என்று அவருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.



வல்சலா குமாரி தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், 41 வயதிலேயே தன்னால் சபரிமலை கோவிலுக்கு செல்ல முடிந்ததாகவும், தற்போது அனைத்து தரப்பு பெண்களும் சபரிமலை கோவிலுக்கு சென்று வழிபட சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்து இருப்பது உண்மையிலேயே நல்ல தீர்ப்பு என்றும் வல்சலா குமாரி கூறி உள்ளார்.

அப்போது பதினெட்டாம் படியில் ஏரி சபரிமலை கோவிலுக்கு செல்ல தனக்கு அனுமதி இல்லாததால் அந்த படிக்கு கீழே கையை கட்டிக் கொண்டு நின்றபடி அய்யப்பனை வழிபட்டதாகவும் இப்போது வல்சலா குமாரி கூறி இருக்கிறார்.

41 வயதில் சபரிமலை கோவிலுக்கு சென்ற அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ள வல்சலா குமாரி, தனக்கு 50 வயது ஆனபிறகு அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டதாகவும் தற்போது அவர் தெரிவித்து உள்ளார்.

சபரிமலையில் சிறந்த முறையில் திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து, பெண்களுக்கென்று தனி வரிசையை ஏற்படுத்தினால் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யமுடியும் என்று கூறி இருக்கும் வல்சலா குமாரி, சில நாட்கள் அல்லது வாரங்களில் பெண்கள் மட்டும் சென்று வழிபட அனுமதிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்து இருக்கிறார். #Sabarimala

Tags:    

Similar News