செய்திகள்

ஆங்கிலம் வியாதியல்ல, ஆங்கிலேய மனப்பான்மைத்தான் வியாதி - வெங்கையா நாயுடு

Published On 2018-09-28 10:22 GMT   |   Update On 2018-09-28 10:22 GMT
ஆங்கில மொழி என்பது வியாதியல்ல. ஆங்கிலேயர்களின் மனப்பான்மையை நாம் கொண்டுள்ளதுதான் வியாதி என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார். #Englishmind #VenkaiahNaidu
பனாஜி:

இந்தி மொழியை கொண்டாடும் விதமாக டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆங்கிலம் என்பது இந்த நாட்டைப் பற்றியுள்ள ஒரு வியாதி போன்றது என்று கூறியதாக சில ஊடகங்களில் முன்னர்செய்தி வெளியானது.

இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் உள்ள தேசிய தொழிநுட்ப பயிலகத்தில் இன்று நடைபெற்ற நான்காவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று பேசிய வெங்கையா நாயுடு, நான் ஆங்கிலத்தை வியாதி என்று குறிப்பிடவில்லை. பிரிட்டிஷாரின் மூலமாக ஆங்கிலேயர்களின் மனப்பான்மையை நாம் கொண்டுள்ளதுதான் வியாதி என்று கூறினார்.



பிரிட்டன் நாட்டினர்தான் உயர்ந்தவர்கள். வெளிநாட்டினர்தான் சிறந்தவர்கள். இந்தியர்கள் ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்னும் கருத்தை பிரிட்டிஷார் கொண்டிருந்தனர். நம்மை விட்டுச் சென்றபோதிலும் அவர்கள் நம்மிடையே உருவாக்கி வைத்திருந்த தாழ்வு மனப்பான்மை நம்மை விட்டு விலகவில்லை.

ஆங்கிலேயர்களின்  மனப்பான்மையை விட்டு நாம் வெளிவர வேண்டும். நமது பாரம்பரியம், கடந்தகால வரலாறு, நமது நாட்டின் உயர்ந்த தலைவர்கள் ஆகியவற்றை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்.

அந்த நேரம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருந்தாலும் குட் மார்னிங், குட் ஆப்டர்நூன், குட் ஈவினிங் என்கிறோம். அந்த சொல் நமது உதயத்தில் இருந்து வருவதால் நமஸ்காரம் என்று சொல்வதில்தான் நமது நன்மதிப்பு அடங்கியுள்ளது.

நீங்கள் எத்தனை மொழிகளை  வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், உரையாடல்களின்போது உங்கள் தாய்மொழியில் மட்டுமே பேச வேண்டும். உங்களது பெற்றோரையும், பிறந்த இடத்தையும், தாய்மொழியையும் எப்போதுமே மறக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். #Englishmind #VenkaiahNaidu
Tags:    

Similar News