செய்திகள்

ரூ.5000 கோடி வங்கிக் கடன் மோசடி - குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?

Published On 2018-09-24 05:44 GMT   |   Update On 2018-09-24 12:56 GMT
5000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் சிக்கிய குஜராத் தொழிலதிபர் துபாயில் இருந்து நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. #GujaratPharma #BankFraud #NitinSandesara
புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வந்தார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து கம்பெனி இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 



மேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடக்கியது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. சிபிஐயும் அவரைத் தேடி வருகிறது.

இதனிடையே நிதின் சந்தேசரா துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நிதின் சந்தேசரா தற்போது துபாயில் இல்லை என்றும், அவர் தன்  குடும்பத்தினருடன் நைஜீரியா நாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரியாவுடன் கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தமோ பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தமோ இல்லாததால் அங்கிருந்து நிதினை இந்தியாவுக்கு கொண்டு வருவது கடினம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே துபாயில் நிதின் சந்தேசரா கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும், இந்த தகவல் வெளியாவதற்கு முன்பாகவே அவர் நைஜீரியாவுக்கு சென்றுவிட்டதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். #GujaratPharma #BankFraud #NitinSandesara
Tags:    

Similar News