செய்திகள்

ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் வெறிச்செயல் - தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. படுகொலை

Published On 2018-09-23 08:30 GMT   |   Update On 2018-09-24 07:10 GMT
ஆந்திர மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் உயிரிழந்தனர். #Andhra #MaoistKillsMLA
ஐதராபாத்:

ஒடிசா, சதீஸ்கர் மற்றும் ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் உள்ள மாவோயிஸ்டுகள் போலீசார் மீதும், அவர்களுக்கு எதிராக இருக்கும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது தற்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களை அழிப்பதற்காகவும், கைது செய்வதற்காகவும் அவர்களின் இருப்பிடமாக கருதப்படும் வனப்பகுதிகளில் போலீசாரும் அதிரடி தேடுதல் வேட்டையும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு இன்று தனது ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் அப்பகுதி மக்களை சந்திக்கச் சென்றனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சென்ற உதவியாள் ஒருவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா


கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ. சர்வேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு சமீபத்தில் மாறியிருந்தார். இவரை கொல்ல மாவோயிஸ்டுகள் நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதேநிலையில், மாவோயிஸ்டுகளால் குறிவைக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு முறையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்த கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. #Andhra #MaoistKillsMLA
Tags:    

Similar News