செய்திகள்

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

Published On 2018-09-20 23:31 GMT   |   Update On 2018-09-20 23:31 GMT
சிறு சேமிப்பு திட்டங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. #SmallSaving #Interest #RatesHiked
புதுடெல்லி:

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை ஒன்றில், தபால் நிலைய சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பொது வைப்பு நிதி (பி.பி.எப்.) போன்ற பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மேற்கூறிய சிறு சேமிப்பு திட்டங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கு வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக வட்டி உயர்த்தப்படுகிறது. அதே போல் பி.பி.எப். மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் கிஷான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாகவும், பெண் குழந்தைக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

எனினும், வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான அடிப்படை வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #SmallSaving #Interest #RatesHiked
Tags:    

Similar News