செய்திகள்

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதாக இருந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இடைத்தரகர் மாயமானதாக தகவல்

Published On 2018-09-19 23:28 GMT   |   Update On 2018-09-19 23:28 GMT
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இடைத்தரகரை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் அவரை காணவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். #AgustaWestland #AgustaWestlandScam #ChristianMichel
துபாய் :

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.423 கோடி லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஊழல் நடந்து இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தை கடந்த 2014–ம் ஆண்டில் இந்திய அரசு ரத்து செய்தது.

இந்த விவகாரத்தில் 3 இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் என்பவர் மட்டும் ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை நாடின. பின்னர் அவர் துபாயில் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, விசாரணைக்காக கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை தங்களிடம் ஒப்படைக்குமாறு துபாய் அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த துபாய் கோர்ட்டு கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கிறிஸ்டியன் மைக்கேலை காணவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் அமல் அல்சுபய் கூறியுள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

அவரை கண்டுபிடித்தால் போலீஸ் கைது செய்யும், அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம், அக்டோபர் 2-ம் தேதி வரையில் அவகாசம் உள்ளது என அவர் கூறியுள்ளார். #AgustaWestland #AgustaWestlandScam #ChristianMichel
Tags:    

Similar News