செய்திகள்

சிம்ஸ் ஆஸ்பத்திரி பொது மேலாளருக்கு 3 ஆண்டு ஜெயில்- லஞ்சம் வாங்கிய புகாரில் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2018-09-19 11:11 GMT   |   Update On 2018-09-19 11:11 GMT
திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் பொது மேலாளர் லஞ்சம் வாங்கியது குறித்து அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.
திருப்பதி:

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அலிபிரி பகுதியில் சிம்ஸ் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆஸ்பத்திரியின் பொது மேலாளராக மோகன் முரளி என்பவர் இருந்து வந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு திருப்பதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சிம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் மருந்துகடை வைப்பதற்கு அனுமதி கேட்டு மோகன் முரளியிடம் மனு கொடுத்தார்.

அப்போது மருந்து கடை வைக்க அனுமதி தரவேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென கூறினார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத புருஷோத்தமன் திருப்பதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சங்கர் ரெட்டியிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை புருஷோத்தமனிடம் கொடுத்து அனுப்பினர்.

அவர் மோகன் முரளியிடம் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர்.

இந்த வழக்கு நெல்லூர் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

அதில் லஞ்சம் பெற்ற சிம்ஸ் ஆஸ்பத்திரி பொது மேலாளர் மோகன் முரளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். #tamilnews
Tags:    

Similar News