செய்திகள்

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் - முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய பி‌ஷப் முடிவு

Published On 2018-09-18 07:03 GMT   |   Update On 2018-09-18 07:03 GMT
கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரை தொடர்ந்து கேரள ஐகோர்ட்டில் பிஷப்-க்கு முன்ஜாமீன் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வக்கீல் தெரிவித்தார். #BishopFranco #keralanun
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ முல்லக்கல் மீது கற்பழிப்பு புகார் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் போப் ஆண்டவருக்கும் கடிதம் எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை நாளை (19-ந்தேதி) போலீசார் முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சம்மனும் அனுப்பி இருந்தனர்.

இதை ஏற்று விசாரணைக்கு ஆஜராவதாக பி‌ஷப்பும் கூறி உள்ளார். மேலும் தனது பி‌ஷப் பொறுப்புகளையும் அவர் மூத்த பாதிரியார் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் பிராங்கோ முல்லக்கல்லின் வக்கீல் விஜயாபானு கூறியதாவது:-

பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் சார்பில் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதேசமயம் போலீஸ் விசாரணைக்கு பி‌ஷப் ஆஜராக எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி நாளை அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பி‌ஷப் மீதான புகார் பற்றி விசாரணை நடத்தி வரும் கோட்டயம் போலீஸ் அதிகாரி ஹரிசங்கர் கூறியதாவது:-

பஞ்சாப் போலீஸ் மூலம் நாளை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு ஏற்கனவே தகவல் கொடுத்து விட்டோம். அவர் கைது செய்யப்படுவாரா? என்பது பற்றி அவருக்கு எதிரான ஆதாரங்களை விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்த பின்னர்தான் முடிவு செய்ய முடியும். நாளை அவரிடம் நடைபெறும் விசாரணையின் இறுதியில்தான் இது தொடர்பான நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையில் பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும் பி‌ஷப்பை கைது செய்ய கோரியும் கொச்சியில் 5 கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இன்று 10-வது நாளாக இந்த போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி நேற்று பங்கேற்றார். அவர் பி‌ஷப்பை கைது செய்யும் வரை தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் அவர் படுத்த நிலையில் தொடர்ந்து போராடி வருகிறார். அவரை நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அன்னா மல்கோத்ரா (வயது 92) சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இன்றும் பல்வேறு அமைப்பினரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். #BishopFranco #keralanun
Tags:    

Similar News