செய்திகள்

மகளிருக்கு உள்ளதைப்போல் ஆண்களுக்கும் தனி ஆணையம் - தொண்டு நிறுவனம் வலியுறுத்தல்

Published On 2018-09-09 13:46 GMT   |   Update On 2018-09-09 13:46 GMT
நாட்டில் தேசிய மகளிர் ஆணையம் செயல்படுவதைப்போல் ஆண்களுக்கும் தனியாக ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என அரசு சாரா தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. #NGO
புதுடெல்லி:

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் நடைபெற்ற தற்கொலைகள் தொடர்பாக ஆய்வு செய்த ஒரு அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ‘நாட்டில் தேசிய மகளிர் ஆணையம் செயல்படுவதைப்போல் ஆண்களுக்கும் தனியாக ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.

பெண்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள பல சட்டங்களை சில பெண்கள் தவறான முறையில் கணவர்களை பழிவாங்கும் போக்கில் பயன்படுத்துவதால் இதில் இருந்து ஆண்களை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என இந்த தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

பிள்ளைகளை கூட்டாக பராமரிக்கும் உரிமைகள் தொடர்பான செயல்பாட்டில் ஈடுபட்டுவரும் World's Rights Initiative for Shared Parenting (CRISP) இந்த தொண்டு நிறுவனம் தேசிய குற்றப்பதிவுகள் ஆவணத்தின் அடிப்படடையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தற்கொலை சம்பவங்களை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2015-ம் ஆண்டில் நிகழ்ந்த 1,33,623 தற்கொலை சம்பவங்களில் அதிகபட்சமாக 91,528 (68 சதவீதம்) ஆண்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களில் திருமணமான  86,808 பேரில் தற்கொலை செய்த ஆண்களின் எண்ணிக்கை மட்டும் 64,534 (74 சதவீதம்) என்று புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகளை சந்திக்க முடியாத மனவிரக்தியில் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மனைவிகளால் துன்புறுத்தப்படும் ஆண்கள் புகார் அளிக்கவும் அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கவும் தேசிய ஆண்கள் ஆணையம் அமைத்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்த அமைப்பின் நிறுவனர் குமார் ஜஹ்கிர்தர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், மனைவியரிடம் சிக்கி கொடுமைக்குள்ளாகும் ஆண்களை பாதுகாப்பதற்கு தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் ஹரி நாராயண் ராஜ்பர் மற்றும் அன்ஷுல் வெர்மா ஆகியோர் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் போலீசில் முன்னாள் மனைவி அளித்த புகாரில் சிக்கி பல பிரச்சனைகளை அனுபவித்த நடிகர் பிரசாந்தும் இதே கோரிக்கையை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #NGO
Tags:    

Similar News