செய்திகள்

காங்கிரஸ் தொகுதியில் சிவராஜ் சிங் சவுகான் வாகனம் மீது கற்களை வீசி தாக்கிய கும்பல்

Published On 2018-09-03 13:16 IST   |   Update On 2018-09-03 13:16:00 IST
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChouhan
இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேருந்தில் தனது பிரச்சார யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அவ்வகையில் இன்று சிதி மாவட்டத்தில் மக்களை நேரில் சந்திப்பதற்காக பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ புறப்பட்டுச் சென்றார்.



அப்போது சர்கட் தொகுதியில் அவரது வாகனம் சென்றபோது, அவருக்கு எதிராக சிலர் முழக்கங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மர்ம நபர்கள், முதல்வரின் வாகனம் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் முதல்வர் சவுகான் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. இந்த  தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான அஜய் சிங்கின் தொகுதியில் முதலமைச்சரை தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்குப்பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார். அஜய் சிங்கிற்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து மோதும்படி சவால் விடுத்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அஜய் சிங், இந்த தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், வன்முறைக் கலாச்சாரத்தை காங்கிரஸ் பின்பற்றாது என்றும் கூறினார்.  #ShivrajSinghChouhan
Tags:    

Similar News