செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவோம் - காங்கிரஸ் அறிவிப்பு

Published On 2018-09-02 20:57 GMT   |   Update On 2018-09-02 20:57 GMT
ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது. #RafaleDeal #KapilSibal
புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்களை மோடி அரசு வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ‘இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான ரகசியம் ஆகும். எனவே இதை பகிரங்கமாக வெளியிட இயலாது’ என்று மறுத்து வருகிறது.



இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு இருக்கிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.

போர் விமானத்தின் தயாரிப்பு தொழில்நுட்பம் தொடர்பாக நாங்கள் கேள்வி எதையும் கேட்கவில்லை. எதன் அடிப்படையில் முன்பு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை விட மும்மடங்கு விலைக்கு வாங்க ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதை அறிந்துகொள்ளவே விரும்புகிறோம். 2012-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் இத்தொகை 2016-ம் ஆண்டில் ரூ.1,600 கோடியாக அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல வக்கீல்களான நீங்களும்(கபில்சிபல்), ப.சிதம்பரமும் இது தொடர்பாக கோர்ட்டுக்கு ஏன் செல்லக்கூடாது?... என்ற நிருபர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “இப்பிரச்சினையில் மத்திய அரசிடம் இருந்து தேவைப்படும் ஆவணங்கள் கிடைக்கும் வரை கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம். ஆவணங்கள் எங்களது கைகளுக்கு வந்தவுடன் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்” என்று குறிப்பிட்டார்.  #RafaleDeal #KapilSibal 
Tags:    

Similar News