செய்திகள்

வழக்கு விசாரணையில் எனது செல்வாக்கை பெறுவதற்கு முயற்சி - சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி பகீர் தகவல்

Published On 2018-09-01 23:29 GMT   |   Update On 2018-09-01 23:29 GMT
வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளின் செல்வாக்கை பெறுவதற்கு முயற்சிப்பது, கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும் என சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி கூறியுள்ளார். #SupremeCourt #IndiraBanerjee
புதுடெல்லி:

நீதிபதிகளை வழக்கு தொடர்பாக தனிப்பட்ட முறையில் அவர்களது செல்வாக்கை பெறுவதற்கு யாரும் அணுகுவதில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி ஒருவரையே இதுபோல் ஒரு வழக்கில் சிலர் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி அணுகிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.



கடந்த 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி (சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்) ஆகியோர் ஓட்டல் ராயல் பிளாசா தொடர்பான ஒரு வழக்கை விசாரித்தனர்.

அப்போது நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், “வக்கீல்களை சந்திக்கும் சாதாரண நிகழ்வுகளின்போது, சில மூத்த வக்கீல்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக பேச ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு இதே விஷயத்தை பேசுகின்றனர். இதுபோல் நீதிபதிகளின் செல்வாக்கை வழக்கு விசாரணைக்காக பெற முயற்சிப்பது தீவிரமானதாக எடுத்துக் கொள்ளப்படும்” என்றார்.

இதையடுத்து, மூத்த வக்கீல் ஷியாம் திவான், “இந்த வழக்கை விசாரணை செய்வதில் இருந்து நீதிபதி இந்திரா பானர்ஜி விலகி விடக் கூடாது. அப்படிச் செய்தால் மற்ற நீதிபதிகளும் இதைப் பின்பற்றும் நிலை உருவாகும்” என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது, நீதிபதி அருண் மிஸ்ரா, “வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளின் செல்வாக்கை பெறுவதற்கு முயற்சிப்பது, கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும்” என்று எச்சரித்தார்.

பெண் நீதிபதியின் இந்த குற்றச்சாட்டு சுப்ரீம் கோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #SupremeCourt #IndiraBanerjee
Tags:    

Similar News