செய்திகள்

ஐதராபாத் அருகே இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் - முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பை சந்திரசேகர் ராவ் வெளியிடுவாரா?

Published On 2018-09-01 21:41 GMT   |   Update On 2018-09-01 21:41 GMT
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் ஐதராபாத் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #TelanganaAssembly #ChandrasekharRao
நகரி:

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவரான சந்திரசேகர் ராவ் முதல்-மந்திரியானார்.

அங்கு அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் மாநிலத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இதில் இறுதி முடிவு எடுக்கவில்லை என மந்திரி கே.டி.ராமராவ் நேற்று முன்தினம் கூறினார்.

இந்த நிலையில் கடந்த 4½ ஆண்டு ஆட்சியில் மாநில அரசு மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செய்து வரும் நலப்பணிகள் உள்ளிட்ட நிலவர அறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் டி.ஆர்.எஸ். கட்சி நடத்துகிறது.

‘பிரகதி நிவேதன சபா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டம் ஐதராபாத் அருகே உள்ள கொங்கர கலான் பகுதியில் நடக்கிறது. இதற்காக அனைத்து வசதிகளுடன் 6 ஆயிரம் ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஆளுங்கட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் ஏராளமானோர் நேற்றே ஐதராபாத்தை நோக்கி புறப்பட்டு வருகின்றனர். அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 1000 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தில், முன்கூட்டிய தேர்தல் குறித்து முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் அறிவிப்பு வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக அவரது தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  #TelanganaAssembly #ChandrasekharRao
 #Tamilnews 
Tags:    

Similar News