செய்திகள்

ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளி சுட்டுக்கொலை - செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

Published On 2018-09-01 06:35 GMT   |   Update On 2018-09-01 06:35 GMT
காளஹஸ்தி அருகே செம்மரக் கடத்தல் கும்பல் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். #RedSandersSmuggling
திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் அதிகளவில் உள்ளன.

சர்வதேச அளவில் கடத்தல்காரர்கள் இங்குள்ள செம்மரங்களை வெட்டி கடத்தி செல்கின்றனர். தமிழகத்தில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த அப்பாவி கூலி தொழிலாளர்களை ஏமாற்றி அழைத்து சென்று செம்மரக் கடத்தலில் ஈடுபடுத்தபடுகின்றனர்.

செம்மர கடத்தலை தடுக்க ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 20 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மீண்டும் தமிழக தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி- காளஹஸ்தி இடையே உள்ள கொல்ல பள்ளி வனப்பகுதியில் கும்பல் செம்மரம் வெட்டிக் கடத்துவதாக கடப்பா செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மற்றும் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12.30 மணிக்கு 10க்கும் மேற்பட்ட கும்பல் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.

போலீசார் வருவதை கண்ட கும்பல் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றிவளைக்க முயன்றனர். அப்போது செம்மரக் கடத்தல் கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இருட்டில் கல் எறிவது தெரியாததால் போலீசாரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

கல்வீச்சில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.

இதையடுத்து தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதனைக்கண்ட கும்பல் 4 புறமும் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்றதில் ஒருவர் சிக்கினார் மற்றவர்கள் காட்டுக்குள் தப்பி சென்றுவிட்டனர்.

அவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி சூட்டில் பலியான வாலிபர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் (வயது 40) என்பது தெரியவந்துள்ளது. அவர் குறித்து முழு விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. பிடிபட்ட மற்றொருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandersSmuggling

Tags:    

Similar News