செய்திகள்

பத்மநாபசுவாமி கோவில் பொக்கி‌ஷங்களை வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்தலாமா?- மன்னர் கருத்து

Published On 2018-08-29 05:44 GMT   |   Update On 2018-08-29 05:44 GMT
பிரசித்திப்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ள பொக்கி‌ஷங்களை கேரள வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்துவது குறித்து திருவிதாங்கூர் மன்னர் கருத்து தெரிவித்துள்ளார். #KeralaFloods
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் ஏராளமான ரகசிய அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அறைகளை திறந்து பார்த்தபோது தங்கம், வைரம் என்று விலை மதிக்க முடியாத பொக்கி‌ஷம் அந்த அறைகளில் நிறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொக்கி‌ஷங்களை கணக்கெடுத்து பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, அந்த பொக்கி‌ஷங்கள் இருந்த 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவை கணக்கெடுக்கப்பட்டது. மேலும் சில அறைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு இன்னும் அனுமதி வழங்காததால் அவை திறக்கப்படவில்லை.

அந்த அறைகளிலும் ஏராளமான பொக்கி‌ஷம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பத்மநாபசுவாமி கோவிலுக்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த பொக்கி‌ஷம் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.


கேரளாவில் தற்போது வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து கேரளம் மீண்டு வர அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் தேவைப்படும் என்று மாநில அரசு கூறி உள்ளது. பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கி‌ஷங்களை கேரள வெள்ளப்பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்ற கருத்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுபற்றி பத்மநாபசுவாமி கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் மன்னர் ஆதித்தயவர்மா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பொக்கி‌ஷங்களின் மொத்த மதிப்பு பற்றி எனக்கு தெரியாது. அவசர கால தேவைக்காக எனது முன்னோர் இவற்றை சேகரித்து வைத்துள்ளனர்.

கேரள இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த பொக்கி‌ஷங்களை நிவாரண பணிக்களுக்கு பயன்படுத்துவது பற்றி நான், எதுவும் கூற முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தான் எதையும் செய்ய முடியும்.

கேரள மாநில அரசும் இதில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும். பத்மநாபசுவாமி கோவில் மட்டுமல்ல அனைத்து மத வழிபாட்டு தலங்களில் இருந்தும் உதவிகளை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods #PadmanabhaswamyTemple
Tags:    

Similar News