செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கடும் நிலச்சரிவு - முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது

Published On 2018-08-25 10:17 IST   |   Update On 2018-08-25 10:17:00 IST
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. #KashmirNationalHighway #KashmirLandslides
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை அவ்வப்போது நிறுத்தப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டதும், யாத்திரை நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நாட்டின் பிற பகுதிகளை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் ராம்சு மாகர்கோட் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை மூடப்பட்டது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பழங்களை ஏற்றி வந்த நூற்றுக்கணக்கான லாரிகள், பயணிகள் வாகனங்கள் நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் லடாக்- காஷ்மீர் இடையிலான பகுதியில் மட்டும் போக்குவரத்து நடைபெறுகிறது.



அதேசமயம், தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் பகுதியை ஜம்முவில் உள்ள ரஜோரி, பூஞ்ச் பகுதியை இணைக்கும் 86 கிலோ மீட்டர் நீளம் கொண்ட முகல் சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் மட்டும் சாலையின் இரு புறங்களிலும் அனுமதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் ஒரு புறம் மட்டுமே இயக்கப்படுகிறது. இதேபோல் ஸ்ரீநகர்-லே சாலையும் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. #KashmirNationalHighway #KashmirLandslides

Tags:    

Similar News