செய்திகள்

வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் - பினராயி விஜயன்

Published On 2018-08-25 00:11 GMT   |   Update On 2018-08-25 00:11 GMT
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #KeralaReliefFund #PinarayiVijayan
திருவனந்தபுரம் :

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. அத்துடன் மாநிலத்தின் பெரும்பாலான அணைகளும் திறக்கப்பட்டதால் 14 மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

அங்கு தற்போது மழை நின்று விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் வெள்ளம், சேறு, சகதியால் மாசுபடிந்த வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் இந்த பணிகளையும், மழை, வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களையும் முதல்–மந்திரி பினராயி விஜயன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு மற்றும் துப்புரவு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன்மூலம் 60,593 வீடுகள் மற்றும் 37,626 கிணறுகள் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 துணைமின் நிலையங்களில் 41 நிலையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

வியாழக்கிழமை நிலவரப்படி 2,774 முகாம்களில் 10,40,688 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்கள் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டு உள்ளன. எனவே ஓணம் விடுமுறையை தொடர்ந்து அவர்கள் அனைவரும் வேறு அரங்குகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர்.

இந்த முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் கிடைப்பதாக அவர்கள் திருப்தி வெளியிட்டு உள்ளனர். வெள்ளத்தால் சேதமடைந்துள்ள தங்கள் வீடுகளை குறித்தே அவர்கள் கவலைப்படுகின்றனர். அவை அனைத்தும் சரி செய்யப்படும்.

மழை வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளின் சீரமைப்பு பணிகளுக்காக, பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதற்கான வட்டியை அரசே செலுத்தும். மேலும் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கியை பை வழங்கப்படும்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார். #KeralaReliefFund #PinarayiVijayan
Tags:    

Similar News