செய்திகள்

தந்தை மகள் உயிரோடு எரித்து கொலை - கீழ்கோர்ட் விடுவித்த 20 பேரை தண்டித்த ஐகோர்ட்

Published On 2018-08-24 10:50 GMT   |   Update On 2018-08-24 10:50 GMT
2010-ம் ஆண்டு தலித் தந்தை - மகள் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழ்கோர்ட்டு விடுவித்த 20 பேரை குற்றவாளி என அறிவித்த ஐகோர்ட் அதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. #MirchpurDalitKilling #DelhiHC
புதுடெல்லி:

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஜாட் இனத்தவர்களுக்கும் தலித் இனத்தவர்களுக்கும் நடந்த மோதலில், மிர்ச்பூர் கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்பு ஜாட் பிரிவினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில், 70 வயது நபர் அவரது 16 வயது மாற்றுத்திறனாளி மகள் எரித்து கொல்லப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட் தலையிட்டதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை டெல்லிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 103 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் 5 பேர் சிறுவர்கள். வழக்கு விசாரணையின் போதே ஒருவர் இறந்து விட்டார்.

கடந்த 2011 செப்டம்பர் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி விசாரணை கோர்ட், மொத்தமுள்ள 97 பேரில் 15 பேரை தண்டித்தும், 82 பேரை விடுவித்தும் உத்தரவிட்டது. தண்டிக்கப்பட்ட 15 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி ஐகோர்ட், திட்டமிட்டே தலித் குடியிருப்புகள் எரிக்கப்பட்டுள்ளது என கூறி 15 பேரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், கீழ்கோர்ட் விடுவித்த 82 பேரில் 20 பேரை குற்றவாளி என அறிவித்த நீதிபதிகள் அதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.
Tags:    

Similar News