செய்திகள்

ஒடிசாவில் சட்ட மேலவை அமைக்க ஒப்புதல் அளித்தது அமைச்சரவை

Published On 2018-08-24 10:05 GMT   |   Update On 2018-08-24 10:05 GMT
ஒடிசா மாநிலத்தில் 49 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மேலவை அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. #OdishaLegislativeCouncil
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் சட்ட மேலவை அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக கடந்த 2015-ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சர்  தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பீகார், தெலுங்கானா, மாநிலங்களுக்குச் சென்று சட்ட மேலவை செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்தது. மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தது. பின்னர் சட்ட மேலவை தொடர்பான பரிந்துரை அறிக்கையை முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் கடந்த 3-ம் தேதி சமர்ப்பித்தது.



இந்நிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்ட மேலவை அமைப்பது தொடர்பான திட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து வரும் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்க உள்ள சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், சட்ட மேலவை தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.

இதுதொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆருக்கா கூறுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 171 (1)-ன்படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மிகாமல் சட்டமேலவையில் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். ஒடிசா சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 147 என்பதால் சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்கள் 49 ஆக இருக்கும்” என்றார். #OdishaLegislativeCouncil

Tags:    

Similar News