செய்திகள்

20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர் - மக்காவில் இன்று ஹஜ் புனித யாத்திரை தொடங்கியது

Published On 2018-08-19 09:55 GMT   |   Update On 2018-08-19 09:55 GMT
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 20 லட்சம் இஸ்லாமிய மக்கள் இன்று மக்கா நகரில் குவிந்தனர். #Hajj2018
மக்கா:

இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு குவிந்துள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் சவுதி அரேபியாவை சேர்ந்த சுமார் ஒருலட்சம் பேரும் பங்கேற்கிறார்கள்.

இந்த வருட யாத்திரைக்கு டெல்லியில் இருந்து இன்று 1200 யாத்ரீகர்கள் இன்று புறப்பட்டு செல்கின்றனர். இந்த குழுவில் டெல்லி மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் யாத்ரீகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

5 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் மக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய பின்னர், மினா நகருக்கு புறப்பட்டு செல்லும் யாத்ரீகர்கள், அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை புறப்பட்டு செல்வார்கள்.


இறைவனின் கட்டளையை ஏற்று இறைத்தூதரான இபுறாஹிம் நபி, தனது ஒரே மகனான இஸ்மாயீலை பலியிட சித்தமான வரலாற்றை நினைவுகூரும் அரபாத் மலையை வலம்வந்த பின்னர், முசதல்பியா என்ற வெட்டவெளியில் கூழாங்கற்களை சேகரித்து, ஜம்ராத் என்ற இடத்தில் தீயமன ஆசைகளான சாத்தான் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தை யாத்ரீகர்கள் நிறைவேற்றுகின்றனர்.

பின்னர், தங்களது விருப்பம்போல் ஆடு மற்றும் ஒட்டகங்களை ‘குர்பானி’ (இறைவனின் பெயரால் புனிதப் பலி) செய்துவிட்டு, தங்களது பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவர்களாக - அன்று பிறந்த குழந்தையைப் போல் ‘ஹாஜி’ என்ற பட்டத்துடன் தங்களது இல்லங்களுக்கு புறப்பட்டுச் செல்வர்.


ஹஜ் யாத்திரைக்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளதால் புனித நகரங்களான மக்கா, மதினாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்பாராத விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் யாத்ரீகர்கள் அனைவருக்கும் மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள அது உதவும். #Hajj2018 #2millionMuslim #hajjpilgrimagebegins
Tags:    

Similar News