செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பு

Published On 2018-08-19 05:16 GMT   |   Update On 2018-08-19 07:10 GMT
ஹரித்வாரில் தொடங்கி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளில் கரைக்கப்படுகிறது. #AtalBihariVajpayee
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்(94) கடந்த 16-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடலுக்கு வளர்ப்பு மகள் தகனம் செய்தார்.

இந்நிலையில், டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகருக்கு இன்று மாலை கொண்டு செல்லப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து உரிய மரியாதையுடன் கொண்டு செல்லப்படும் வாஜ்பாயின் அஸ்தி கலசம் லக்னோ நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

ஹரித்வார் நகரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் அவரது ஈமச்சடங்குகள் இன்று நடைபெறுகிறது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் நகருக்கு கொண்டு செல்லப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி அங்குள்ள சாந்தி கஞ்ச் ஆசிரமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கங்கை நதியின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் என்னும் இடத்தில் ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.


வாஜ்பாயின் ஈமச்சடங்குகளில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர மாநிலங்களின் முதல் மந்திரிகள் கலந்து கொள்கின்றனர்.

ஹரித்வாரில் கரைக்கப்படுவது போல் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளிலும் மறைந்த வாஜ்பாயின் அஸ்தி கரைக்கடவுள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. தலைமையகங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் வைக்கப்படுகிறது. மாநில, மாவட்ட, பஞ்சாயத்துகள் அளவில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை கூட்டங்களை பா.ஜ.கவினர் நடத்துகின்றனர்.

நாளை டெல்லியில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு வாஜ்பாயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி பிரார்த்தனை கூட்டத்தில் ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யாநாத் மற்றும் வாஜ்பாயின் உறவினர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் அவரது அஸ்தி கோமதி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

சென்னைக்கு கொண்டு வரப்படும் வாஜ்பாயின் அஸ்தி தமிழக மக்களின் அஞ்சலிக்கு பின்னர் இராமேஸ்வரம், கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. #AtalBihariVajpayee #RIPVajpayee #Vajpayeeashes #Haridwar
Tags:    

Similar News