செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டு பாடம் கட்டாயம் - மத்திய அரசு திட்டம்

Published On 2018-07-30 06:12 GMT   |   Update On 2018-07-30 06:12 GMT
அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டை தனி பாடத்திட்டமாக உருவாக்கி, அதில் தேர்வு நடத்துவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. #CBSE #CentralGovernment
புதுடெல்லி:

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டு கல்விக்கும் முக்கியத்தும் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் விளையாட்டு பீரியடு என தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இது தனி பாடமாக உருவாக்கப்பட்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதற்காக பரீட்சைகளும் கிடையாது.

இப்போது அதை தனி பாடத்திட்டமாக உருவாக்கி அதிலும் பரீட்சை நடத்துவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆய்வு நடந்து வருகிறது.

ஏற்கனவே விளையாட்டு கல்வியை சுகாதாரம் மற்றும் உடற்கல்வி என்று அழைக்கப்பட்டு வந்தது. புதிதாக கொண்டுவரப்படும் பாடத்திட்டத்தின்படி இதை சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டு என்று மாற்றுகிறார்கள்.

இது சம்பந்தமாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மற்றும் கல்வி மந்திரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இது அமலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் ராகுல்பட்நாகர் கூறியுள்ளார்.

மற்ற பாடங்களை போல இதுவும் தனி பாடமாக இருக்கும். அதற்கு பரீட்சையும் நடத்தப்படும். 100 மார்க்குக்கு தேர்வு நடக்கும். அதில் 70 மார்க் எழுத்து தேர்வுக்கும், 30 மார்க் செய்முறை தேர்வுக்கும் வழங்கப்படும்.



1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்த பாடம் இருந்தாலும் அவர்களுக்கு பரீட்சை நடத்தப்படமாட்டாது. ஆனால் 8-ம் வகுப்புக்கு மேல் கட்டாயம் பரீட்சை நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் அவர்கள் தேர்வானவர்களாக கருதப்படுவார்கள்.

இது மட்டுமல்லாமல் இந்த பாடத்திற்காக தினமும் தனியாக வகுப்புகளும் நடத்த வேண்டும். அதற்காக தனி பீரியடு உருவாக்க வேண்டும் என்றும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. #CBSE #CentralGovernment

Tags:    

Similar News