செய்திகள்

பட்டேல் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் வன்முறை - ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டுகள் சிறை

Published On 2018-07-25 09:13 GMT   |   Update On 2018-07-25 09:13 GMT
பட்டேல் இடஒதுக்கீடு போராட்டத்தின் போது, எம்.எல்.ஏ அலுவலகத்தை சூறையாடியதாக தொடரப்பட்ட வழக்கில், ஹர்திக் படேல் உள்ளிட்ட மூவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. #HardikPatel
அகமதாபாத்:

கடந்த 2015-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார். இந்தப் போராட்டத்தின் போது, மேஹ்சனா மாவட்டத்தின் விஸ்நகரில் உள்ள பாஜக எம்.எல்.ஏ ரிஷிகேஷ் பட்டேலின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக ஹர்திக் பட்டேல், அவரது ஆதரவாளர்கள் லால்ஜி பட்டேல் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு விஸ்நகரில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட இரண்டு பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், மீதம் உள்ளவர்கள் மீது போதுமான ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி வி.பி.அகர்வால் தீர்ப்பு கூறினார்.

ஹர்திக் பட்டேல், லால்ஜி பட்டேல் மற்றும் சர்தார் பட்டேல் அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை காலம் விதிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பட்டேலால் ஜாமீன் பெற முடியும் என்பதால் அவரின் வழக்கறிஞர் ஜாமீன் மனுவை உடனடியாக தாக்கல் செய்தார்.
Tags:    

Similar News