செய்திகள்

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்- மகாராஷ்டிராவில் இரண்டாவது நாளாக முழு அடைப்பு

Published On 2018-07-25 09:40 IST   |   Update On 2018-07-25 09:40:00 IST
மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டாவது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #MarathaProtest #MaharashtraBandh
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இதற்கிடையே மராத்தா கிரந்தி மோர்ச்சா சார்பில் நேற்று முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டத்தின்போது வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக முழு அடைப்பு போராட்டம் நீடிக்கிறது. இதனால் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.



இந்த கண்காணிப்பையும் மீறி ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது. நவி மும்பை அருகே பிர்கான்முமபை மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து கன்சோலி பகுதியில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்காத வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். அதேசமயம், குடிநீர் விநியோகம், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் சேவை, பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு விலக்கு அளித்துள்ளனர். #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation

Tags:    

Similar News