செய்திகள்

லோக்பால் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் - மல்லிகார்ஜுன கார்கே பிரதமருக்கு கடிதம்

Published On 2018-07-19 11:22 GMT   |   Update On 2018-07-19 11:22 GMT
லோக்பால் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என காங்கிரஸ் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #LokpalMeet #PMModi #MallikarjunKharge
புதுடெல்லி:

பிரதமர், மத்திய மந்திரிகள், மத்திய அரசு அதிகாரிகள் என அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் லோக்பால் அமைப்பை விரைந்து அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை லோக்பால் தேர்வுக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ளது.

லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரு உறுப்பினர். ஆனால், தற்போதைய நிலவரப்படி மக்களவையில் குறைந்த எம்.பி.க்கள் இருப்பதால் எதிர்க்கட்சி அங்கீகாரம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை. 

இதனால், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சிறப்பு அழைப்பாளர் என குறிப்பிட்டு அவர் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில், லோக்பால் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக கார்கே பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், மக்களவையில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியான அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு லோக்பால் தேர்வு குழுவில் உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என நாங்கள் கூறி வருகிறோம். 

ஆனால், சிறப்பு அழைப்பாளர் என்ற பிரிவில் என்னை கலந்து கொள்ள அழைத்துள்ளீர்கள். இப்படி ஒரு உறுப்பினரை அழைக்க கூடாது என விதிகள் உள்ளதை அரசு நன்கு அறியும். எனவே, லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். #LokpalMeet #PMModi #MallikarjunKharge
Tags:    

Similar News