செய்திகள்

திருப்பதி அறங்காவலர் குழுவில் ஆன்மீகவாதிகள் இல்லாததே குளறுபடிகளுக்கு காரணம் - ரமண தீட்சிதர்

Published On 2018-07-18 09:42 GMT   |   Update On 2018-07-18 09:42 GMT
திருப்பதி அறங்காவலர் குழுவில் ஆன்மீகவாதிகள் இல்லாததே குளறுபடிகளுக்கு காரணம் என்று திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைமை அர்ச்சகரான ரமண தீட்சிதர் குற்றச்சாட்டி உள்ளார்.
திருமலை:

திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைமை அர்ச்சகரான ரமண தீட்சிதர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆகம விதிகளின்படி நடத்தப்படும் அஷ்டபந்தன பாலாலய மகா சம்ரோக்‌ஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் மிகவும் முக்கியமானது. இதில் தற்போது பக்தர்களை அனுமதிக்காததுடன் தேவஸ்தான ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்து, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சாமியின் மடப்பள்ளியில் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படும் பழங்கால நகைகளை அபகரிக்கும் திட்டமோ இது என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

கோவிலுக்குள் எங்கேயாவது நகைகள் புதைக்கப்பட்டுள்ளதா என சக்தி வாய்ந்த ஸ்கேனர்கள் உதவியுடன் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் சிலர் சமீபத்தில் ஆய்வு செய்துள்ளனர். இது குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

பல்லவர்கள் முதற்கொண்டு, விஜயநகர பேரரசர் வரை, பல அரசர்கள் சம்ரோக்‌ஷணம் நடத்தி உள்ளனர். அப்போதெல்லாம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதை காரணம் காட்டுவது சரியல்ல.

பல பிரச்சினைகளை நாங்கள் அதிகாரிகளிடம் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க யாருக்கும் அக்கறை இல்லை. அறங்காவலர் குழுவில் அரசியல்வாதிகள் தான் உள்ளனரே தவிர, ஆன்மீகவாதிகள் இல்லை. இதுதான் பிரச்சினைக்கும் குளறுபடிகளுக்கும் காரணம்.

இவ்வாறு ரமண தீட்சிதர் கூறினார். 
Tags:    

Similar News