செய்திகள்

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அசாம் மாநில சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

Published On 2018-07-16 12:56 GMT   |   Update On 2018-07-16 12:56 GMT
பேய்,பிசாசு,பில்லி,சூனியம் தொடர்பான மூடநம்பிக்கைகளுக்கு 7 ஆண்டு தண்டனை விதிக்கும் அசாம் மாநில சட்டத்துக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். #Assamantiwitchhuntingbill
கவுகாத்தி:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் பேய்,பிசாசு, பில்லி, சூனியத்தில் மக்களுக்கு உள்ள மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. சூனியம் வைத்து பலர் கொல்லப்படுவதாகவும், சூனியம் வைத்து கொன்றதாக சில மந்திரவாதிகளை உள்ளூர் மக்கள் அடித்தும், எரித்தும் கொல்வதும் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வந்தது.

இதன் விளைவாக கடந்த 2001-2017-ம் ஆண்டுகளுக்கு இடையில் 114 பெண்களும், 79 ஆண்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 202 வழக்குகளை அம்மாநில போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், பேய்,பிசாசு,பில்லி,சூனியம் தொடர்பாக  மந்திரவாதிகளின் செயல்களுக்கும் இது சம்பந்தமான கொலைகளுக்கும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்ட மசோதா 13-8-2015 அன்று அசாம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா கவர்னர் மூலம் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக கிடப்பில் இருந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 13-6-2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Assamantiwitchhuntingbill
Tags:    

Similar News